இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான இரண்டாண்டுகால போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். இத்திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், ஹமாஸ் அமைப்பிற்கு இதை ஏற்க 6 மணிவரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், உலக நாடுகள் அதன் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றன.

ஹமாஸ் அமைப்பு சில அம்சங்களை ஏற்றுக்கொண்டு, சில விவகாரங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேசமயம், கைதி பரிமாற்ற ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். “ஆரம்ப விலகல் பாதைக்கு” இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது என்பதால், அமைதி ஒப்பந்தம் நெருங்கியுள்ளதாக உலகம் முழுவதும் நம்பிக்கை நிலவுகிறது.
ஹமாஸ் உறுதிப்படுத்தியவுடன் போர்நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும், பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடங்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இதனிடையே, “மிகப்பெரிய சாதனையின் விளிம்பில் நாங்கள் உள்ளோம்” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இன்னும் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விடாத நிலையில், ஹமாஸ் தாமதிக்காமல் முடிவெடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார். உலக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்த அமைதி முயற்சி வெற்றி பெறுமா என்பது இன்றைய முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.