வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உடல்நிலை குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 79 வயதான டிரம்புக்கு சமீப காலமாக உடல்நிலை சவால்கள் இருக்கிறது என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. குறிப்பாக, அவர் அடிக்கடி கால்களில் வீக்கம் காரணமாக நடையில் சிரமம் ஏற்பட்டது, மேலும் வலது கையில் கன்றிப்போன காயம் தென்பட்டது என்பதும் ஊடகங்களில் செய்திகள் ஆனது. இதற்கிடையில், டிரம்ப் தென் கொரிய அதிபரை சந்தித்தபோது, அந்த அறிகுறிகள் வெளிப்படையாக காணப்பட்டதால் பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால், வெள்ளை மாளிகை இந்த தகவல்களை முழுமையாக மறுத்தது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். “எதிர்பாராத பெரிய துயரம் ஏற்பட்டால், அதிபர் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல் உருவானால், அதற்கான அனைத்து பயிற்சிகளையும் எடுத்து தயாராக இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். வான்ஸ் கூறிய இந்த பதில், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “அதிபர் டிரம்ப் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் மீதமுள்ள பதவிக்காலத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வார். அமெரிக்க மக்களுக்காக அவர் இன்னும் பல சிறப்பான முடிவுகளை எடுக்கக்கூடிய வலிமையுடன் உள்ளார். ஆனால், அவசர நிலை உருவானால், துணை அதிபராக கடந்த 200 நாட்களில் நான் பெற்ற அனுபவம், அதிபர் பொறுப்பை மேற்கொள்வதற்கு உதவும்” என்றார். இந்தக் கருத்து, அவரது நம்பிக்கை மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கு இடம் தருவதாகப் பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, டிரம்பின் உடல்நிலை குறித்த வதந்திகள் மற்றும் வான்ஸ் வழங்கிய இந்த நேர்மையான பதில், வரவிருக்கும் அமெரிக்க அரசியலின் பாதையை எவ்வாறு மாற்றும் என்பதற்கு அனைவரும் கவனமாகக் காத்திருக்கின்றனர். எதிர்பாராத சூழ்நிலைகள் உருவானால், அமெரிக்க அரசியலில் தலைமைப் பொறுப்பு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.