
மாஸ்கோ: இணையத்தில் பயங்கரவாதம் என அரசால் வகைப்படுத்தப்பட்ட தகவல்களை தேடினால்கூட தண்டனை பெற்றே ஆக வேண்டும் என்ற புதிய சட்டம் ரஷ்யாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டு பார்லிமென்ட், கடந்த சில நாட்களாக விவாதிக்கப்பட்ட இந்த சட்ட மசோதாவுக்கு நேற்று இறுதி ஒப்புதல் வழங்கியது.
2022-ல் உக்ரைனைத் தாக்கிய ரஷ்யா, அந்தப் போருக்கான உள்நாட்டு எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்த இணைய தணிக்கையை கடுமையாக நடத்தியது. இதனால், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், அரசுக்கு எதிராக இணையத்தில் தேடுதல், பகிர்வு போன்றவை “தீவிரவாத” தொடர்புடைய செயல்களாக கருதப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

புதிய சட்டத்தின் படி, இத்தகைய ‘தவறான’ இணைய தேடலுக்கே ரூ.5,000 அபராதம் விதிக்கப்படலாம். ஆனால், இதில் ரஷ்ய அரசு விருப்பத்திற்கேற்ப எதிர்க்கட்சிகள், ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் போன்றவையும் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் அறக்கட்டளை கூட அந்த வகுப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மசோதா தற்போது அதிபர் விளாடிமிர் புடினின் ஒப்புதலை மட்டுமே எதிர்நோக்கி இருக்கிறது. இதற்கிடையில், கருத்து சுதந்திரம் குறைந்து வருவதாகவும், அரசுக்கு எதிரான யாரும் சட்டத்தின் பெயரில் அடக்கப்படுகின்றனர் என்றும் சர்வதேச விமர்சனங்கள் எழுந்துள்ளன.