வாஷிங்டன்: அமெரிக்க எம்பியும் இந்தியா–அமெரிக்க கூட்டமைப்பின் இணைத் தலைவருமான ரோ கன்னா, “டிரம்பின் ஈகோ காரணமாக இந்தியாவுடனான உறவை அழிக்க அனுமதிக்க முடியாது” என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா–அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அதிபர் டிரம்பின் தற்போதைய நடவடிக்கைகள், அந்த முயற்சிகளை பாதிப்புக்குள்ளாக்குகின்றன. இந்தியா மீது அவர் 50 சதவீத வரியை விதித்துள்ளார். இது பிரேசிலை தவிர வேறு எந்த நாட்டிற்கும் விதிக்கப்படாத அதிகபட்ச வரி விகிதம். சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரியைவிட கூட அதிகமானது.

இந்த நடவடிக்கை, அமெரிக்காவுக்கான இந்தியாவின் தோல் மற்றும் ஜவுளி உள்ளிட்ட ஏற்றுமதியைப் பாதிக்கிறது. அதேசமயம் அமெரிக்க உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதியிலும் பின்னடைவு ஏற்படுகிறது. இதன் விளைவாக இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா நோக்கி நகரும் அபாயம் உருவாகியுள்ளது.
ரோ கன்னா மேலும், “உலகை வழிநடத்துவது அமெரிக்காதான், சீனா அல்ல. அதற்கு இந்தியாவுடனான உறவு மிக முக்கியம். அதிபர் டிரம்பின் ஈகோ காரணமாக இந்த உறவை அழிக்க விட முடியாது. இந்திய அமெரிக்கர்கள் இதை கவனிக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.