சென்னை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியை ஒளிபரப்ப கனடாவில் ஆஸ்திரேலியா டுடேக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் தொடரும் என்று ஆஸ்திரேலியா டுடே தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா டுடே மீடியாவின் நிர்வாக ஆசிரியர் ஜிதார்த் ஜெய் பரத்வாஜ் கூறுகையில், மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்திகளை கூறுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எவ்வளவோ தடைகள் வந்தாலும் நிலைத்து நிற்போம். பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் இந்த நேரத்தில் ஆதரவைப் பெற்றுள்ளோம். வெளிப்படைத்தன்மையுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்றார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியில் பங்கேற்றார். அதில், இந்தியா-கனடா உறவுகள் மற்றும் கனடாவில் நடக்கும் காலிஸ்தான் பயங்கரவாதம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இதை ஆஸ்திரேலியா டுடே ஒளிபரப்பியது. இந்நிலையில் கனடா ஊடக நிறுவனத்துக்கு வியாழக்கிழமை தடை விதித்தது.
இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், விசித்திரமானது. கருத்து சுதந்திரம் குறித்த கனடாவின் பார்வையை இந்த வழக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மூன்று விஷயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். ஆதாரம் இல்லாமல் கனடா குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது என்று கூறியிருந்தார்.
அதேபோல், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் கண்காணிப்பை ஏற்க முடியாது என்று அவர் கூறினார்,” என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.