நியூயார்க்: ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா, பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை வெளிப்படையாக சாடியுள்ளது. சிறுபான்மையினரை துன்புறுத்தும் ஒரு நாடு, மனித உரிமைகள் குறித்து மற்றவர்களுக்கு போதிக்க முடியாது என இந்திய தூதர் முகமது ஹுசைன் கடுமையாகக் கூறினார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறும் 60வது கூட்டத்தின் போது, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதற்கு பதிலளித்த இந்தியா, பாகிஸ்தான் தனது சொந்த நாட்டிலேயே மனித உரிமைகளை மதிக்காமல் நடந்து கொண்டு, உலக அரங்கில் போலி பிரசாரம் செய்வதை கண்டித்தது.
இந்திய தூதர், “பாகிஸ்தான் தனது உள்நாட்டு தோல்விகளை மறைக்க, சர்வதேச மன்றங்களில் இந்தியாவை குற்றம்சாட்டுகிறது. ஆனால் உண்மை என்னவெனில், அந்நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி வாழ்கின்றனர். அதுபோல் ஒருவர் மனித உரிமைகள் பற்றி பேசுவது மிகப் பெரிய முரண்பாடு” எனக் குறிப்பிட்டார்.
ஐநாவில் இந்தியாவின் இந்த கடும் கண்டனம் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்பதையும், தங்கள் நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்காமல், பிறரை குறை கூறும் பழக்கத்தை நிறுத்த வேண்டியது அவசியம் என்பதையும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.