காத்மாண்டு: இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்ற இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி நேபாள பிரதமர் சர்மா ஒலியை சந்தித்து பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பில் நேபாளத்துக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா உடன் இருந்தார்.

இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது, வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நேபாளத்தின் இந்தியத் தூதரகம் தெரிவித்ததாவது, மிஸ்ரியின் பயணம், இந்தியா மற்றும் நேபாளத்துக்கிடையேயான வழக்கமான உயர்மட்ட உறவை பிரதிபலிக்கிறது மற்றும் அண்டை நாட்டிற்கு முன்னுரிமை கொள்கையை உறுதிப்படுத்துகிறது.
சந்திப்பின் பின்னர், நேபாள அதிபர் ராமசந்திர பவுடால் மற்றும் வெளியுறவு அமைச்சர் அர்ஸு ரானா தேயுபாவைவும் சந்தித்து விவாதித்தார். பயணத்தின் இரண்டாம் நாளில் நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷேர் பஹதுார் தியோபா மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டாவை சந்திப்பார்.
நேபாள பிரதமர் செப்டம்பர் 16 அன்று டில்லி வருவதைப் பற்றிய ஏற்பாடுகளும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.