வாஷிங்டன்: விசா கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானபோது இந்தியாவுக்குப் புறப்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் விமானத்தில் இருந்து இறங்கும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமானம் 19-ம் தேதி இந்தியாவுக்குப் புறப்படத் தயாராக இருந்தது.
விமானத்தில் ஏராளமான இந்திய மென்பொருள் பொறியாளர்கள் இருந்தனர். அந்த நேரத்தில், H1B விசாக்களுக்கான கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதை அறிந்ததும், பல இந்திய மென்பொருள் பொறியாளர்கள் உடனடியாக விமானத்திலிருந்து இறங்கினர். அவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினர். விமானத்தில் இருந்த ஒரு பயணி இந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

“இந்திய பயணிகள் மீண்டும் அமெரிக்காவிற்குத் திரும்ப முடியாது என்ற அச்சத்தில் அவசரமாக வெளியேறினர்,” என்று அவர் கூறினார். மற்றொரு வீடியோவில், பயணிகள் நடைபாதையில் குழப்பத்தில் நிற்பதையும், சிலர் பதட்டத்துடன் விசா கட்டணங்களைச் சரிபார்க்க தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதையும் காணலாம். இந்திய பயணிகளின் அவல நிலையைப் புரிந்துகொண்ட விமானத்தின் கேப்டன், “அன்புள்ள பயணிகளே! நாங்கள் முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். பல பயணிகள் எங்களுடன் பயணிக்க விரும்பவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
இந்தியாவுக்கான விமானம் புறப்படுவதற்கு முன்பு யார் வேண்டுமானாலும் இறங்கலாம்,” என்று அவர் அறிவித்தார். இந்தக் குழப்பம் காரணமாக எமிரேட்ஸ் விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. பிரிட்டனில் விசா கட்டணம் ரத்து செய்யப்பட்டது: உலகின் சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களை ஈர்ப்பது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஒரு முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, மிகவும் திறமையான நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான விசா கட்டணங்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ரூ.90,000 விசா கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.