நியூயார்க்: பத்திரிகை சுதந்திரத்தை பறிக்க பொய் வழக்கு போடும் அரசுகள் என்று இந்தியாவை சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசுகளுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் பத்திரிகைகள் குறிவைக்கப்படுவதாக உலக செய்தி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், அரசுக்கு எதிரான விமர்சனத்தைக் கலைக்க பணமோசடி, வரி ஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், சட்டவிரோத, நிதி மோசடி உள்ள பொய் வழக்குகள் போடப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் டெல்லியில் இயங்கி வரும் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது கடந்த வருடம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போடப்பட்டு அதன் நிறுவனர் கைது செய்யப்பட்டதை இந்த சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளது.
இதுபோல உலகம் முழுவதும் உள்ள பல அரசாங்கங்கள் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவதாக அவ்வமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை நியூஸ் கிளிக் தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கர்நாடகாவை சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இந்து அமைப்பினரால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் கைதான குற்றவாளிகள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.