வாஷிங்டனில் இருந்து வெளியாகும் தகவலின்படி, அமெரிக்கா, ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்களை மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளாக்கி உள்ளது. நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ அணு மையங்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில், உலகில் இதுவரை பயன்படுத்தப்படாத ஜி.பி.யூ-57 எனப்படும் ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஈரானின் பார்டோ அணு மையம், கடுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது ஒரு மலைக்குள், 80 முதல் 90 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டதால், சாதாரண குண்டுகளால் தாக்க முடியாத நிலையில்தான் அமைந்துள்ளது. இங்கு யுரேனியம் செறிவூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டுவந்ததாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவுத்துறைகள் கண்டறிந்திருந்தன.
அதனால், இந்த வளங்களை அழிக்கவும், அந்த பகுதியில் பதுங்கி இருக்கும் அணு உள்கட்டமைப்பை நசுக்கவும், அதிக ஆழத்தில் வெடிக்கக்கூடிய ஜி.பி.யூ-57 குண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவை வெடிக்கும் இடத்தை முற்றிலும் அழித்து விடும் தன்மையுடையவை.
இந்த பங்கர் பஸ்டர் குண்டுகளை அமெரிக்கா, பி-2 என அழைக்கப்படும் அதிநவீன குண்டுவீச்சு போர் விமானங்களைப் பயன்படுத்தி வீசியுள்ளது. ஒவ்வொரு விமானமும் இரண்டு ஜி.பி.யூ-57 குண்டுகளை ஏற்றுச் செல்லும் திறன் கொண்டது. ஒவ்வொரு குண்டும் 13.6 டன் எடையுடையதாகும்.
தாக்குதல் வெற்றிகரமாக நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், “ஈரான் அடிபணியாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் மோசமான தாக்குதல் நடத்தப்படும்” என்ற எச்சரிக்கையும் அவர் விடுத்துள்ளார்.
எனினும், பார்டோ அணு மையம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான தகவலை ஈரான் அரசு தற்போது வரை வெளியிடவில்லை. ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்ற தகவலின்படி, நுழைவாயில் மற்றும் பின்புற அமைப்புகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல், ஈரான்-இஸ்ரேல் இடையேயான கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் போர் சூழ்நிலையை அதிகரிக்கும் வகையில் அமையும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர். இதன் தாக்கம் பகிரங்கமாவதில் சில நாட்கள் ஆகும் என்றும், இது மத்திய கிழக்கு வலயத்தில் மீண்டும் பெரும் பதற்றத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது.
ஜி.பி.யூ-57 குண்டுகள் என்ற ஒற்றை ஆயுதத்தால், அமெரிக்கா சர்வதேச பாதுகாப்பு கணக்கீடுகளில் புதிய முனையை தொடுகிறதென பலரது கருத்து. ஈரான், இதற்கான பதிலடி நடவடிக்கையில் இறங்குமா என்பதும் தற்போது உலகத் தலைவர்களின் கவனமாக மாறியுள்ளது.