தெஹ்ரானில் இருந்து வரும் தகவல்களின்படி, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றம் மேலும் மோசமாகியுள்ளது. ஈராக் மீது அமெரிக்கா முன்னதாக நடத்திய போர் போல, தற்போது ஈரானையும் ஒரு நீண்டகால போரில் தள்ள அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஈரானின் தலைவர் அலி காமெனி, தொலைக்காட்சியில் மக்களிடம் உரையாற்றும்போது, “அமெரிக்கா மற்றும் சியோனிஸ ஆட்சியினருக்கு (இஸ்ரேல்) எதிராக நாங்கள் தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் என்பது அமெரிக்காவின் வளர்ப்பு பிராணி” என கடுமையாக விமர்சித்தார்.

சமீபத்தில் இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரானில் உள்ள அணு ஆய்வகங்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தது. ஈரான், இதற்கு பதிலளிக்க சிரியா வழியாக இஸ்ரேலையும், கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்களையும் தாக்கியது.
இதனால், அமெரிக்கா கடும் கோபத்தில் இருப்பதாகவும், தாக்குதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஈராக் போர் மாதிரி ஒரு நிலை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா, ஈரானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. அதன் மாற்றாக, ரஷ்யாவை பயன்படுத்தி சமாதான முயற்சி செய்ய எண்ணியது. ஆனால் உக்ரைன் விவகாரம் காரணமாக ரஷ்யா அதற்கு முன்வரவில்லை.
இதனால், தற்போது அமெரிக்காவுக்கு தாக்குதலுக்கான அனைத்து வாய்ப்புகளும் திறந்துவிட்டன. விரைவில் ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஈரான் இவற்றையெல்லாம் எதிர்பார்த்து, போருக்கு முழுமையாக தயாராகி வருகிறது. ஆயுத இறக்குமதியை அதிகரித்துள்ளது. குறிப்பாக, வான் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தியுள்ளது.
இந்த நீண்டகால போர் தொடங்கினால், அது மட்டும் ஈரான்-அமெரிக்கா மோதலாக இருக்காது. மத்திய கிழக்கு மற்றும் ஆசியா முழுவதும் அதன் தாக்கம் காணப்படும்.
போரின் பின்னணியில் உள்ள பிரச்சினைகள் சரியான முறையில் தீர்க்கப்படாவிட்டால், இது ஒரு பெரும் பன்னாட்டு பிரச்னையாக மாறும்.