இஸ்ரேலுடன் தங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் போரின் பின்னணியில், வாட்ஸ் அப் செயலியை உடனடியாக நீக்குமாறு தங்கள் நாட்டினர் அனைவருக்கும் ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் கடந்த சில நாட்களாக ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரானும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்த இருநாடுகளுக்கிடையிலான மோதல் உலக நாடுகளுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் காட்டும் தாக்குதல்களுக்கு எதிராக பல இஸ்லாமிய நாடுகள், அரபு கூட்டமைப்புகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இஸ்ரேலுக்குத் தரவுகள் கசியக்கூடும் என்ற அச்சத்துடன், ஈரான் அரசு தங்கள் மக்களிடம் வாட்ஸ் அப்பை நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் அரசின் தொலைக்காட்சியில் வெளியான இந்த உத்தரவில், செல்போன்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வாட்ஸ் அப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வாட்ஸ் அப்பின் மூலம் நாட்டிற்குள் பகிரப்படும் தகவல்கள் இஸ்ரேலுக்கு சென்றுவிடும் என்ற சந்தேகம் இந்த நடவடிக்கைக்கு காரணமாகத் தோன்றியுள்ளது.
இந்த உத்தரவை வாட்ஸ் அப் நிறுவனம் மறுத்துள்ளது. எங்கள் சேவைகள் பயனர்களின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுகின்றன என்றும், எங்களிடம் இருந்து எந்த அரசாங்கத்துக்கும் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்றும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களை கண்காணிப்பதும் இல்லை என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.