ஒட்டாவா: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அக்டோபர் 28-ம் தேதிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவரது சொந்தக் கட்சி எம்.பி.க்கள் கண்டித்துள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் அடையாளம் தெரியாத ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவ்விவகாரத்தில் இந்தியா மீது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரடியாக குற்றம்சாட்டினார்.இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனேடிய பிரதமர் ட்ரூடோவுக்கு சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லிபரல் எம்.பி.க்களின் ரகசிய கூட்டத்திலும் ட்ரூடோ கலந்து கொண்டார். பின்னர் ஒவ்வொரு எம்.பி.க்கும் பேச இரண்டரை நிமிடம் வழங்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி பேசிய எம்.பி.க்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி 24 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதமும் கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில், ‘அக்டோபர் 28-ம் தேதிக்குள் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும்’ என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது கனடிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.