தோஹா: கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு தலைநகர் தோஹாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பயணம் மேற்கொண்டார். அங்கு கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியை சந்தித்து, பிராந்திய பாதுகாப்பு, பாலஸ்தீனர்களின் உரிமைகள் மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து கலந்துரையாடினார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் வளைகுடா நாடுகளில் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கத்தார் மீது நிகழ்ந்த தாக்குதல் சர்வதேச சட்ட மீறல் எனவும், இதை அவசரமாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டம் நடத்த பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி கத்தாரில் நடைபெற உள்ள அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல், அதை இணைந்து நடத்தவும் தயாராக இருப்பதாகவும் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையால், வளைகுடா நாடுகளில் அரசியல் பரபரப்பு நிலவுகிறது. மேலும், இஸ்லாமிய உலகம் உண்மையில் ஒன்றுபடுமா என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்துள்ளது.