இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான நீண்டநாள் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேலுக்கு புறப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த மோதல், அக்டோபர் 10ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தத்தில் அமலுக்கு வந்தது. இந்த அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக டிரம்ப் 20 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை முன்மொழிந்திருந்தார். அதன் முதற்கட்டமாக கைதிகள் விடுவிப்பு இடம்பெற உள்ளது.

இந்த அமைதி ஒப்பந்தம் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக் நகரில் இன்று நடைபெறும் முக்கிய கூட்டத்தில் கையெழுத்தாக உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதன் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான நீண்டநாள் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்துக்கு செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இது ஒரு வரலாற்று தருணம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அமைதி நாளாக இது அமையும். பல வருடங்களாக நடந்த மோதல்களுக்கு இது ஒரு முடிவாகும். இந்த முயற்சியில் பங்கு பெறுவது பெருமையாகும்,” எனக் கூறினார். மேலும், “இது நான் முடித்து வைக்கும் எட்டாவது போராகும். பல நாடுகளில் நடந்த போர்களை ஒரே நாளில் தீர்த்துவைத்த அனுபவம் எனக்குண்டு. இது நோபல் பரிசுக்காக அல்ல, உயிர்களை காப்பாற்றுவதற்காக,” என்றும் தெரிவித்தார்.
டிரம்ப் மேலும், இந்தியா – பாகிஸ்தான் மோதல் உட்பட பல போர்களை வரி கொள்கையால் தீர்த்ததாகக் கூறினார். “நீங்கள் போர் செய்ய விரும்பினால், 100 முதல் 200 சதவீதம் வரை வரி விதிப்பேன் என்று சொன்னேன். அதனால் 24 மணிநேரத்தில் பிரச்சினைகள் தீர்ந்தன. வரி கொள்கை இல்லையெனில் அந்த போர்கள் ஒருபோதும் முடிவடைந்திருக்காது,” என டிரம்ப் வலியுறுத்தினார். உலக அமைதிக்காக இந்த முயற்சி மிகப் பெரிய முன்னேற்றம் என அவர் தெரிவித்தார்.