இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோசமான நிலைமையை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தானே குறைத்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத மையங்களை தாக்கியது. இதில் முக்கிய ஆளுநர்கள் மற்றும் விஞ்ஞானிர்கள் பலியாகினர். இதனால் பதிலடி நடவடிக்கையாக ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

தொடர்ந்து இருநாடுகளும் பகல், இரவு பாராமல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் “ஆபரேஷன் ரைசிங் லையன்” எனும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதோடு, ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3” எனும் பெயரில் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலால் அயன் டோம் பாதுகாப்பு கவசம் உடைக்கப்பட்ட நிலையில், பேட் ஏம் நகரத்தில் 7 பேர் பலியானார்கள். இதில் குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழந்தனர். டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்களில் சைரன்கள் ஒலித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியன.
இருநாடுகளின் தாக்குதலால் இருபுறத்திலும் பலர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் 128 பேர் இறந்ததாகவும், 900 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், 380 பேர் காயமடைந்தனர் என அறிவிக்கப்பட்டது. ஈரானின் மஸ்சாத் விமான நிலையம் வரை இஸ்ரேலின் தாக்குதல் நீண்டிருக்கிறது. டெஹ்ரான் உட்பட முக்கிய நகரங்களில் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடந்ததால், மக்கள் பீதி அடைந்தனர்.
இந்நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சமாதானத்திற்கான வாய்ப்பு உள்ளது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கருத்து தெரிவித்தார். ஈரான் அணு ஆயுதத்தை கைவிட வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு எனவும் அவர் கூறினார். இதனிடையே, ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில், இந்த மோதலை நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். உலக நாடுகளுக்கிடையே உள்ள பிரச்னைகளைத் தீர்க்கும் முயற்சியில் தான் ஈடுபட்டிருப்பதாகவும், அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.