ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம், வழக்கமான பாதையை தவிர்த்து மாற்று வழியாகப் பறந்தது. பொதுவாக கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் வான்வெளியை கடந்து செல்லும் விமானம், இந்த முறை சில நிமிடங்கள் மட்டும் கிரீஸ் மற்றும் இத்தாலி வான்வெளியைத் தொட்டு, பின்னர் மத்தியதரைக்கடல் மீது பறந்து, ஜிப்ரால்டர் வழியாக அட்லாண்டிக் கடல் கடந்தே அமெரிக்கா சென்றது. இதனால் பயண நேரம் கூடுதலாக எடுத்தது.

இதற்கான முக்கிய காரணம், சமீபத்தில் பிரான்ஸ் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது. அதற்கு முன்னரே ஸ்பெயின் அங்கீகாரம் வழங்கியிருந்தது. இந்நிலையில், நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் காசா போர் குற்றச்சாட்டில் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதால், அவசர தரையிறக்கத்தில் கைது ஆணையை அமல்படுத்தும் அபாயம் இருந்தது.
இந்த அச்சம் காரணமாக, நெதன்யாகுவின் விமானம் ஐரோப்பிய வான்வெளியை பெரும்பாலும் தவிர்த்து கடல் வழியாக அமெரிக்கா சென்றதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் ஐநா பொதுச்சபையில் நெதன்யாகு வெள்ளிக்கிழமை உரையாற்றவுள்ளார். அதேபோல, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமரின் இந்த நடவடிக்கை, ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டின் தாக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், சர்வதேச நீதிமன்ற உத்தரவுகள் உலக அரசியல் சூழ்நிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கும் எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. பாலஸ்தீன பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நெதன்யாகுவின் அமெரிக்க பயணம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.