பெய்ரூட்: பெரும் பதற்றம்… லெபனானில் ஐ.நா., அமைதிப் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
காசாவில் இருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் – இஸ்ரேல் ராணுவம் இடையேயான போர் ஓராண்டை கடந்து விட்ட நிலையிலும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலை மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், 22 பேர் கொல்லப்பட்டனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா., இடைக்காலப் படை (யுனிபில்) தலைமையகம் மற்றும் ஐ.நா., அமைதிப்படை நிலைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில், யுனிபில் வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இருப்பினும், காயமடைந்த வீரர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை ஐ.நா., வெளியிடவில்லை.