ஜப்பான்: ஜப்பானில் சமீபத்தில் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட தாத்தாக்கள் 3 பேர் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓய்வு எடுக்கும் வயதில் இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டது ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பூட்டி இருக்கும் வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளையடித்து உள்ளனர். இந்த டீமுக்கு “G3S ” என்ற கோட் வேர்ட் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஒரு சம்பவத்தை செய்து விட்டு இவர்கள் 3 பேரும் சிறைக்கு சென்றனர்.
அங்கு நண்பர்களாகிய இவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு எப்படி பிழைப்பது என்று யோசித்தனர். தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர்கள் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் ஒருவருக்கு 88 வயது, இன்னொருவருக்கு 70 வயது, மற்றொருவருக்கு 69 வயது என்பது தெரிய வந்தது.
இவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததும் திட்டமிட்டபடி பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி உள்ளனர்.
மேலும் இவர்கள் வயதானவர்கள் என்பதால் தொடர் கொள்ளையில் ஈடுபட முடியவில்லை. ஒரு வீட்டில் கொள்ளை அடித்தால் அந்த பணம் தீரும் வரை அமைதியாக இருந்துள்ளனர். இதுபோன்று ஒவ்வொரு கொள்ளை சம்பவத்திற்கும் இடையில் பெரும் இடைவெளி இருப்பதால் காவல்துறையினருக்கு இந்த வழக்குகள் சவாலாக இருந்துள்ளது. பின் காவல்துறையினர் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.