வாஷிங்டன்: “உலகத்தில் ஏழு போர்களை நிறுத்திய எனக்கு கூட, ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் கடினமாக உள்ளது” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார், என்றாலும் நிலைமை இன்னும் சிக்கலானதாகவே உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் மோதல் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. தற்காலிக அமைதி பேசப்பட்டாலும், நிலையான தீர்வு எட்டப்படவில்லை. டிரம்ப் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும், இருநாடுகளும் இணக்கம் காட்டவில்லை. “புடின் மற்றும் ஜெலன்ஸ்கி இணைந்து செயல்பட முடியுமா என நாங்கள் கவனித்து வருகிறோம். ஆனால் அவர்கள் நேரடியாக ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைக்க முடியாத நிலை உள்ளது” என டிரம்ப் கூறினார்.

“இருவரும் சந்தித்து பேச வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், அவர்கள் தொடர்ந்து சண்டைபோட்டுக்கொண்டு, மக்களை கொல்கிறார்கள். இது ஒரு முட்டாள்தனமான நிலை. நான் ஏற்கனவே ஏழு போர்களை நிறுத்தி இருக்கிறேன். இந்தப் போரையும் நிறுத்த விரும்புகிறேன். ஆனால் இது மிகவும் கடினமாக மாறிவருகிறது,” என டிரம்ப் நேர்மையாகவும், சற்றே ஏமாற்றத்துடனும் கூறினார்.
அத்துடன், இரு தலைவர்களுடனும் நேரடியாக அமர்ந்துப் பேச வேண்டியதா என்பதைப் பற்றி, இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலக அமைதிக்காக பெரிய காரியங்களை செய்ததாக தனது பங்கினை வலியுறுத்திய டிரம்ப், இப்போதைய ரஷ்யா-உக்ரைன் சூழ்நிலை, அவரை கூட சவாலில் தள்ளி விட்டதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.