டோக்கியோ: ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சானே தகைச்சி, இந்த மாத மத்தியில் நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆளும் கட்சியாகும். அக்கட்சியின் தலைவரும் ஜப்பானின் முன்னாள் பிரதமருமான ஷிகெரு இஷிபா, ஒரு வருட பதவிக்குப் பிறகு பதவி விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் சானே தகைச்சி இன்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். முதல் சுற்று வாக்கெடுப்பில், மொத்தம் 589 வாக்குகளில் 183 வாக்குகளைப் பெற்றார் சானே தகைச்சி. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொய்சுமி 164 வாக்குகளைப் பெற்றார்.

மற்ற மூன்று வேட்பாளர்களும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இரண்டாவது சுற்றில், கட்சி எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதில், கோய்சுமி சானே தகைச்சியை விட அதிக வாக்குகளைப் பெற்றார். இருப்பினும், இரண்டாவது சுற்றுக்குப் பிறகு நடைபெற்ற தீர்க்கமான சுற்று வாக்கெடுப்பில் சானே தகைச்சி வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக சானே தகைச்சி முறைப்படி பொறுப்பேற்றார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த மாத நடுப்பகுதியில் அவர் நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். 64 வயதான வலதுசாரி தலைவரான சனே தகைச்சி, நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.
இருப்பினும், அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளில் பெரும்பாலான காலமாக ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சியே ஆளும் கட்சியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.