
அமெரிக்காவின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவர் ஜிம் ரோஜர்ஸ் (82). அனுபவமிக்க முதலீட்டாளரான இவர், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் பொருளாதாரத்தை மிகத் துல்லியமாகக் கணித்து வருகிறார். அதன்படி, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியா குறித்து கூறியதாவது:- 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.அதிலிருந்து இந்தியாவில் 14 டிரில்லியன் டாலர்கள் (ரூ.1,182 லட்சம் கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவில் 8 லட்சம் கோடி டாலர் (ரூ.676 லட்சம் கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை ஆகும். எனது கணிப்பின்படி, இந்தியா மிக நீண்ட காலமாக பொருளாதார விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சியில் முதல்முறையாக இந்தியா பொருளாதார விஷயங்களை சரியாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி சூழ்நிலைக்கு ஏற்ப சரியான பொருளாதார முடிவுகளை எடுத்து வருகிறார்.

ஜி20 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் இந்தியா ஆகியவை அடங்கும். இந்த அமைப்பில் உள்ள மற்ற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது. நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகவே உள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது. நடப்பு 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 250 மில்லியன் இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், இந்தியப் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகளில் பெரும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
அதனால்தான் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிக முதலீடு செய்கிறேன். அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ மீதான இறக்குமதி வரியை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளார். இது சரியான முடிவு அல்ல. டிரம்ப் அமெரிக்காவுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும் கூறி வருகிறார். இது அமெரிக்க பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு ஜிம் ரோஜர்ஸ் கூறினார்.