கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். தற்போது அவர் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அவர் தனது கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ட்ரூடோவின் சொந்தக் கட்சி எம்.பி.க்களே அவரை மீண்டும் கனடா தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து ட்ரூடோவை நீக்கிவிட்டு, அவர் விலகிய பிறகு புதிய தலைவரை நியமிக்க கட்சிக்குள் ஆலோசனை நடந்து வருகிறது. குறிப்பாக, ட்ரூடோ அரசுக்கு ஆதரவாக இருந்த என்டிபி, தற்போது தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக இந்த மாற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதில், வரும் 8ம் தேதி கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த சந்திப்புக்கு முன்னதாகவே அவர் ராஜினாமா செய்வதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை ட்ரூடோ பிரதமர் பதவியில் நீடிப்பார் என கூறப்படுகிறது.