வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், டொனால்டு டிரம்ப் மாநிலம், மாநிலம் பயணம் செய்து சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிசும், டொனால்டு டிரம்பும் சம பலத்துடன் தொடர்வதால், தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக அமையும் என உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனையடுத்து, தங்களது ஆதரவு சதவீதத்தை அதிகரிக்க இருவரும் கடைசி கட்ட சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய வேட்பாளர்கள் பாணியில் டிரம்ப் பர்கர், உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரித்து, குப்பை லாரி ஓட்டி வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் புதிய வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், அரிசோனாவில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், அதிபர் ஒபாமாகேர், பெண்கள் மற்றும் பெண்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை டிரம்ப் மீண்டும் ரத்து செய்யப் போவதாக எச்சரித்தார். இதற்கிடையில், நிவானா கவுண்டியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப், ஜோ பைடன் நிர்வாகம் அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேற்றத்தை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். இதே நிலை நீடித்தால் அமெரிக்கா ஆக்கிரமிக்கப்பட்ட தியேட்டராக மாறும் என்றும் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.