கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமன் அரசு விதித்திருந்த மரண தண்டனை தற்போது முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல், இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் அலுவலகத்தின் உறுதிப்படுத்தலுடன், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி உறுதியாகியுள்ளது.

நிமிஷா பிரியா, 2008-ஆம் ஆண்டு வேலைக்காக ஏமனுக்கு சென்றவர். பின்னர், தனது குடும்பத்துடன் அந்நாட்டில் செட்டில் ஆனார். 2015-ல் தனது மூலிகை மருத்துவ கிளினிக்கில் நடந்த சம்பவம், அவரை வாழ்க்கையின் கடுமையான திருப்பத்திற்கு இட்டுச் சென்றது. சொந்த கிளினிக்கை அபகரிக்க முயன்ற ஏமன் நபர் மஹ்தியை, மயக்க மருந்து செலுத்தி மீட்க முயன்ற போது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்காக 2017-ல் கைது செய்யப்பட்ட நிமிஷா பிரியாவுக்கு, ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்த நிலையில், அவரது குடும்பத்தினர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அரசியல் மற்றும் மத தலைவர்களின் முயற்சியுடன் பலமான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக பிரபல சூஃபி தலைவரான ஷேக் ஹபீப் உமரின் வழியாக, உயிரிழந்த மஹ்தியின் குடும்பத்துடன் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து, இறுதியாக, ஏமன் தலைநகர் சனாவில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, மனிதநேயமும், இருதயப்பூர்வமான பறைசாற்றும் முயற்சிகளும் இணைந்து சாதிக்க முடியும் மகத்தான வெற்றி என்பதற்கான விளக்கமாக அமைகிறது. நிமிஷா பிரியாவுக்கு புதிய வாழ்வின் வாயில் திறக்கப்பட்டுள்ளது.