ஒட்டாவா: கனடாவில் டொராண்டோவில் உள்ள பிராம்ப்டன் நகரில் இந்து மகாசபைக்கு சொந்தமான கோயில் உள்ளது. இங்கு, இந்திய தூதரகம் மூலம் இந்தியர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த வாரம் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
அப்போது, இந்து கோவிலுக்கு வந்த பக்தர்களை திடீரென தாக்கினர். காலிஸ்தான் கொடி கம்பங்களால் பெண்கள் மற்றும் குழந்தைகளை கும்பல் தாக்கியது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனேடிய எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பீல் பிராந்திய காவல் துறை வெளியிட்ட அறிக்கை: இந்துக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் பிராம்ப்டனை சேர்ந்த இந்தர்ஜித் கோசல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஆயுதங்களால் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.
கோசல் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார், குர்பத்வந்த் சிங் பன்னுவின் ஜஸ்டிஸ் ஃபார் சீக்கியர் இயக்கத்தின் கனடாக் கிளையின் அமைப்பாளராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர் தான் இந்த இந்தர்ஜித் கோசல் என்று கூறப்படுகிறது. அவர் அங்குள்ள தூதரகத்தின் முன் இந்தியாவுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார்.