பெய்ஜிங்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை தொடர்ந்து, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். அவர்களுக்கிடையே நடந்த சந்திப்பின் பின் வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சியில், கிம் ஜாங் உன் தண்ணீர் குடித்த டம்ளரை உதவியாளர்கள் உடனே எடுத்துச் சென்றதோடு, அவர் அமர்ந்திருந்த இருக்கையை கிருமிநாசினியால் முற்றிலும் சுத்தம் செய்தனர். இது கிம் ஜாங் உன்னின் டிஎன்ஏ ரகசியத்தை பாதுகாக்கும் முயற்சியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாநாடு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மோடி, ஜின்பிங் மற்றும் புதின் ஆகியோருடன் தனிப்பட்ட முறையிலும் கலந்துரையாடினார். பின்னர் அவர் நாடு திரும்பினார். இதன் மூலம் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகியவை அமெரிக்காவுக்கு எதிராக கைகோர்த்துள்ளன என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
அதனைத் தொடர்ந்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு பயணம் செய்தார். அங்கு இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியடைந்ததை நினைவுகூரும் வகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உனும், புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சேர்ந்து பங்கேற்றனர். மூவரும் ஒன்றாக அமர்ந்து ராணுவ அணிவகுப்பை கண்டு ரசித்தனர்.
அதனை அடுத்து, கிம் ஜாங் உன் மற்றும் புதின் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்காவின் எதிரிகளாகக் கருதப்படும் ரஷ்யா மற்றும் வடகொரியாவின் இந்த சந்திப்பு, சர்வதேச அரசியலில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, கிம் ஜாங் உன் மீது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாலும், அவரது டிஎன்ஏ ரகசியத்தை காக்கும் முயற்சிகள் உலக அரசியல் பார்வையாளர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளன.