ஜகர்த்தா: கனமழையால் நிலச்சரிவு… இந்தோனேஷியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 17 பேர் உயிரிழந்தனர்.
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் கொரண்டலோ மாகாணத்தில் உள்ள, போன் பொலாங்கோ மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் சுரங்கத்தில், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாது பொருட்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுஇருந்தனர்.
நேற்று முன்தினம் இங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு பணியாற்றிய பலரும் சிக்கினர். அவர்களில் சிலர் மண்ணுக்குள் புதைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், 23 பேரை உயிருடன் மீட்டனர். இதில், 18 பேர் காயமடைந்தனர்.
மேலும், மூன்று பெண்கள் உட்பட, 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது.