வாஷிங்டன்: புளூம்பெர்க் வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், ‘மெட்டா’ நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், 2வது இடத்திற்கு முன்னேறினார். ப்ளூம்பெர்க் வாராந்திர உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிடுகிறது. கடந்த வார பட்டியலில் டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க் முதலிடம் பிடித்தார்.
இந்த வாரம் வெளியிடப்பட்ட பட்டியலில் 256 பில்லியன் டாலர்களுடன் எலோன் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது சொத்து மதிப்பு 206 பில்லியன் டாலர்கள்.
கடந்த சில ஆண்டுகளில், மெட்டா மிகவும் வளர்ந்த சமூக வலைப்பின்னல் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 30 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இந்நிறுவனம் உலகின் 7வது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பின்னர் Instagram மற்றும் WhatsApp ஐ வாங்கியது.
இதுநாள் வரை 2வது இடத்தில் இருந்த அமேசான் சிஇஓ ஜெஃப் பெசோஸ் இம்முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 205 பில்லியன் டாலர்கள்.
பிரான்சின் பெர்னார்ட் அர்னால்டு 193 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும், அமெரிக்காவின் லாரி எலிசன் 179 பில்லியன் டாலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர். பில் கேட்ஸ் 163 பில்லியன் டாலர்களுடன் 6வது இடத்திலும், லாரி பேஜ் 150 பில்லியன் டாலர்களுடன் 7வது இடத்திலும் உள்ளனர்.
ஸ்டீவ் பால்மர் 145 பில்லியன் டாலர்களுடன் 8வது இடத்திலும், வாரன் பப்பட் 143 பில்லியன் டாலர்களுடன் 9வது இடத்திலும், செர்ஜி பிரின் 141 பில்லியன் டாலர்களுடன் 10வது இடத்திலும் உள்ளனர்.