மெக்சிகோ: அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்தியா மீது 50 சதவீத வரியை விதிக்கும் முடிவுக்கு, மெக்சிகோவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீராக்கும் முயற்சியாக, வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை உயர்த்த, அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டார். அதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளுக்கும் பரஸ்பர வரியை விதித்த அவர், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு, ஏப்ரல் 2-ம் தேதி முதல் கட்டமாக 25 சதவீத வரிவையும், தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 27-ம் தேதி மீண்டும் 25 சதவீத வரியையும் விதித்து அறிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை விதிப்பதாக மெக்சிகோ அறிவித்துள்ளது. இந்திய மட்டுமல்லாமல், சீனா மற்றும் பல ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 50 சதவீதம் வரை புதிய வரிகளை விதிக்க மெக்சிகோவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், இந்த புதிய வரி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவே இந்த வரியை விதித்துள்ளதாக, மெக்சிகோ அதிபர் கிளாடகயா ஷீன்பாமின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வரி விதிக்கும் மெக்சிகோவின் முடிவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. இது, சீனா உட்பட வர்த்தக கூட்டாளிகளின் நலன்களுக்கு கணிசமான அளவில் தீங்கு விளைவிக்கும் என அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு நடவடிக்கை, இந்தியா-மெக்சிகோ ஆகிய இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
2024-ம் ஆண்டில், இந்தியா, மெக்சிகோ இடையே 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, கடந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி 8.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே சமயம், இந்தியாவிற்கான இறக்குமதி 2.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. மெக்சிகோவின் ஏற்றுமதியாளர்களில் இந்தியா ஒன்பதாவது பெரிய நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவின் இந்த அறிவிப்பால், வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், ஆடைகள், பிளாஸ்டிக், எஃகு போன்றவற்றின் மீதான இறக்குமதி வரிகள் 50 சதவீதம் அதிகரிக்க உள்ளன. இந்த வரிகள், சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை அதிக அளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது.