பொலிவியா: பொலிவியாவில் ராணுவ சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் லா பாஸ் அருகே எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான படைக்கு சொந்தமான ஹெர்குலஸ் ரக சரக்கு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்திற்குள்ளானது.
விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற நிலையில் தீப்பிடித்து எரிந்தபடி அருகில் இருந்த நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்த நிலையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பொலிவிய மத்திய வங்கியின் புதிய கரன்சி நோட்டுகள் பிற நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. விமானம் மோதிய வேகத்தில் அந்த பெட்டிகள் உடைந்து, சாலை மற்றும் அருகில் இருந்த வயல்வெளிகள் முழுவதும் ரூபாய் நோட்டுகள் சிதறின. இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து காரணமாக எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.