டெல் அவில்: லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு நடத்தியதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெக்ரானில் படுகொலை செய்யப்பட்டார்.
இதில் இஸ்ரேல் மீது ஈரான், ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளன. இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதன்படி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரானின் உச்ச தலைவர் உத்தரவிட்டார்.
இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் உள்ளது. மேலும் லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கம் தங்களது தளபதி கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவில் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். வடக்கு இஸ்ரேல் பகுதியான பெய்ட் ஹில்லெல்லை குறிவைத்து சுமார் 25 நிமிடங்கள் வரை இடைவிடாமல் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை ஏவினர்.
50 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து வந்தன. அந்த ஏவுகணைகளை நடுவானிலேயே இடை மறித்து இஸ்ரேல் அழித்தது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.