கத்தார் அமீரும், அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியும் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தனர். அரசு முறை பயணமாக நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை மத்திய அமைச்சர்கள் அல்லது வெளியுறவுத்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வரவேற்பது வழக்கம். ஆனால் கத்தார் அமீரை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். முன்னதாக, டெல்லி விமான நிலையம் வந்தடைந்த கத்தார் அமீருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
கத்தார் மன்னரை பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றார். இரண்டு நாள் பயணமாக கத்தார் மன்னர், அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் கத்தார் மன்னர் இந்தியா வருவது இதுவே முதல் முறை. முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரை பிரதமர் மோடி நேரில் விமான நிலையத்தில் வரவேற்றார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் போஸ்டில், “எனது சகோதரரான கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை வரவேற்க விமான நிலையத்திற்கு சென்றேன். அவருக்கு பயனுள்ள இந்திய பயணம் அமைய வாழ்த்துக்கள். நாளை அவரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.