சிசினாவ்: கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவா, ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான வாக்கெடுப்பு நடத்த உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்க அந்நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி மக்களின் மனதை மாற்ற ரஷ்யா முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு சிறிய நாடு, மால்டோவா, மேற்கில் ருமேனியா மற்றும் கிழக்கில் உக்ரைன் எல்லைகளைக் கொண்ட ஒரு ஏழை நாடு. இந்த நாட்டிற்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், ஐரோப்பிய யூனியனில் மால்டோவா இணைவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.
மால்டோவா ஒரு சுதந்திர நாடாக இருந்தாலும், உக்ரைனைப் போலவே ரஷ்யா மால்டோவாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது. ஐரோப்பிய யூனியனுடன் இணைந்தால் அங்கு மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும்.
மால்டோவா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதை ரஷ்யா விரும்பவில்லை, ஏனெனில் அது ரஷ்யாவை பாதிக்கும். இதை சீர்குலைக்க ரஷ்யா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மால்டோவா மக்களின் வங்கிக் கணக்குகளில் ரஷ்யா பணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் மட்டும் 1,30,000 மால்டோவன்களின் வங்கிக் கணக்குகளில் ரஷ்யா ரூ.125 கோடி செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய ஜனாதிபதி மையா சாண்டுவை தேர்தலில் தோற்கடிக்க பெரும் தொகை செலவிடப்படும் என்றும், மால்டோவாவில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சியின் தலைவரான இலன் ஷார் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் மால்டோவன் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை தங்களுக்கு சாதகமாக மாற்ற ரஷ்யா முயற்சிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.