கொழும்பு: இலங்கையில் கடந்த 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. ஆட்சியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நமல் ராஜபக்ஷ ஆகியோர் 38 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டன. வெற்றிக்கு தேவையான வாக்குகளில் 50 வீதத்திற்கு மேல் எவரும் பெறாததால், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. நீண்ட போராட்டத்தின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரா குமாரா திஸாநாயக்க (வயது 56) வெற்றி பெற்றார்.
இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமாரா திஸாநாயக்க நேற்றுமுன்தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதனையடுத்து இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஹரிணி அமரசூரியவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்தார். இதையடுத்து, அவர் நேற்று இலங்கை பிரதமராக பதவியேற்றார்.
தேசிய மக்கள் சக்தி கூட்டனி பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுனாராச்சி ஆகியோருடன் ஹரிணி அமரசூரிய அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதையடுத்து நேற்று இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கையில் நவம்பர் 14-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் அனுரா குமாரா திஸாநாயக்க அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் என அதிபர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அதிபர் அனுரா குமாரா திஸாநாயக்க புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.