வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய் தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்தை இந்தியா மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் ஐநா தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: டிரம்பின் எண்ணெய் கருத்துக்கு இந்தியா வலுவான பதிலளிக்க வேண்டும். மேலும் ஒரு தீர்வைக் காண வெள்ளை மாளிகையுடன் இணைந்து செயல்படுவது அவசியம். இது விரைவில் நடந்தால் இரு நாடுகளுக்கும் நன்மை ஏற்படும்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான பல தசாப்தங்களாக நீடித்து வரும் நட்பு உறவை வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். வர்த்தக பிரச்சனைகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகள் போன்ற முரண்பாடுகளை சமாளிக்க உரையாடல் முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
“இந்தியாவுக்கு மிகப்பெரிய தேவை என்னவென்றால், சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவை ஒரு நம்பகமான நண்பனாகக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான உறவு இரு தரப்பும் புரிந்துகொள்வது அவசியம்” என நிக்கி ஹாலே தெரிவித்தார்.
அமெரிக்க அரசியலில் முக்கிய குரலாக விளங்கும் நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருப்பதால், இந்தியா-அமெரிக்க உறவில் தனது கருத்துக்கள் அதிக கவனத்தை பெறுகின்றன. சில நாட்களுக்கு முன்பும், “அமெரிக்காவுக்கு இந்தியாவின் நட்பு அவசியம்” என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கருத்துகள், இந்தியா தனது எரிசக்தி தேவைகளையும், சர்வதேச அழுத்தங்களையும் சமநிலைப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் வெளிவந்துள்ளன.