இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவை எதிர்கொள்வதில் பெரும் சிரமம் அனுபவித்த பாகிஸ்தான், தனது ராணுவத்திறனை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக, “ஏவுகணை படை” (New Army Rocket Force) என்ற புதிய பிரிவை உருவாக்கும் திட்டத்தை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார். புதிய பிரிவு, நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்கள், அதிநவீன ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் வான்வழி பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்ஹாம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் பலவீனங்கள் வெளிப்பட்டதாகவும், அதனை சமாளிக்க விரைவான இராணுவ மாற்றங்கள் அவசியம் என பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்தியாவுடன் நீண்டநாள் பதற்றம் நிலவும் நிலையில், இந்த புதிய ஏவுகணை பிரிவு அமைப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ போட்டியை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் எழுந்துள்ளது.