லாகூர்: சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக், பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள நங்கனா சாகிபுவில் பிறந்தார். அவரது நினைவாக ஒரு குருத்வாரா உள்ளது. இதேபோல், பாகிஸ்தான் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சீக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலங்களுக்கு ஆன்மீக யாத்திரை செல்கின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி லாகூரில் நேற்று கூறியதாவது:- சவுதி அரேபியா முஸ்லிம்களின் புனித பூமி. அதேபோல பாகிஸ்தான் சீக்கியர்களின் புனித பூமி. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானுக்கு வருகை தருகின்றனர். இந்த எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்த விரும்புகிறோம். பாகிஸ்தானுக்கு வரும் சீக்கியர்கள் விசா பெறுவதில் சில சிரமங்களை எதிர்கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சிக்கலை தீர்க்க ஆன்லைன் இலவச விசா திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதன்படி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சீக்கியர்கள் பாகிஸ்தானில் இறங்கியவுடன் ஆன்லைனில் விண்ணப்பித்து இலவச விசாவைப் பெறலாம். 30 நிமிடங்களில் விசா வழங்கப்படும்.
ஒரு நபர் ஒரு வருடத்தில் 10 முறை இந்த இலவச விசாவைப் பெறலாம். இதனை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார். வட அமெரிக்க பஞ்சாபி சங்கத்தின் செயல் இயக்குனர் சத்னம் சிங் கூறுகையில், “பாகிஸ்தான் அரசின் இலவச விசா திட்டத்தை வரவேற்கிறோம்.
வாகா-அட்டாரி எல்லை வழியாக இந்தியா-பாகிஸ்தான் இடையே வர்த்தகம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். குறிப்பாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் வளர்ச்சி அடையும்,” என்றார்.