இஸ்லாமாபாத்: இந்தியா நடத்திய தாக்குதலால் தளர்ந்து நிற்கும் பாகிஸ்தான், தற்போது சீனாவை நம்ப முடியாது என முடிவுக்கு வந்துள்ளது. சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக, பாகிஸ்தான் துருக்கியை நாட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, சீனாவின் HQ-9 வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் இந்திய தாக்குதல்களை கண்டறிய இயலாததால், புதிய தேடலில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. தற்போது துருக்கியின் ALP 300G ரேடார் அமைப்பை பெற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், விமானப்படை மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பாரிய இழப்புகளை சந்தித்தது. அதிலும் முக்கியமாக, HQ-9 ரேடார் அமைப்புகள் முற்றிலும் செயலிழந்தன.
பாகிஸ்தானின் 80% ராணுவ உபகரணங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. HQ-9 ரேடார் அமைப்புகள் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை வானிலேயே கண்டறிந்து அழிக்கலாம் என நம்பப்பட்டது. ஆனால் இந்தியாவின் துல்லியமான தாக்குதலுக்கு எதிராக இவை தன்னிச்சையாக செயல்பட இயலவில்லை. HQ-9 அமைப்புகள் மூலமே எதிரி தாக்குதலை எதிர்கொள்ள முடியும் என்ற பாகிஸ்தானின் நம்பிக்கையை இந்தியா முற்றிலும் தரையிறக்கியது.
இதன் பின்னணியில் தான் பாகிஸ்தான் துருக்கியின் ALP 300G ரேடார் அமைப்பை நோக்கி திரும்பியுள்ளது. இந்த அமைப்பை உருவாக்கியுள்ள அசில்சன் என்ற துருக்கி நிறுவத்துடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ALP 300G ரேடார் என்பது டிஜிட்டல் பீம்ஃபார்மிங் தொழில்நுட்பத்தில் செயல்பட கூடியதாகும். இது பல கிலோமீட்டர்கள் தொலைவில் பாிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை கூட விரைவில் கண்டறிந்து கண்காணிக்க முடியும்.
மேலும், இந்த அமைப்பை 30 நிமிடங்களில் எளிதாக நிறுவி, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்த இயலும். ACCS என்ற நேட்டோ கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைந்து செயல்படும் திறனும் இதில் உள்ளது. எல்லா வானிலை சூழலிலும் இயங்கும் வல்லமை கொண்ட ALP 300G ரேடார் அமைப்பு, பாகிஸ்தானுக்கு தற்போது மிக அவசியமாக மாறியுள்ளது.
சீனாவின் தொழில்நுட்பங்களில் ஏமாற்றம் ஏற்பட்ட பாகிஸ்தான், துருக்கியின் ராணுவ வளர்ச்சி மற்றும் பராமரிப்பு துறைகளை நம்ப முனைந்துள்ள நிலை, அதன் தற்போதைய ராணுவ மரியாதையை பிரதிபலிக்கிறது. இந்த மாற்றம், பாகிஸ்தானின் பன்னாட்டு பாதுகாப்பு கூட்டாளிகள் மீது ஏற்படும் நிலைமாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.