புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவது கடந்த ஒரு மாதமாக அதிகரித்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி புர்ஹன் வானி 2016-ம் ஆண்டு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் தீவிரவாத இயக்கங்களில் காஷ்மீர் இளைஞர்களின் பங்களிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தற்போது காஷ்மீரில் உள்ளுர் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 30 ஆகவும், வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 75 முதல் 80 ஆகவும் இருப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்கள் மூலம் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த குளிர்காலத்தில் ஆட்களை தேர்வு செய்து அடுத்த ஆண்டு கோடையில் தீவிரவாத தாக்குதல்களை அதிகரிக்க பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக நிதியுதவி தடை செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை ஆதரித்தவர்களுக்கு அரசு வேலை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக பயங்கரவாத இயக்கங்களுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் குறைந்தன. ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் முயற்சி அதிகரித்துள்ளது. பேஸ்புக், எக்ஸ், டெலிகிராம், டார்க் வெப் போன்ற சமூக வலைதளங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவுக்கு எதிராக 2,016 செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 89 அறிக்கைகள் மட்டுமே. தற்போது 22 மடங்கு அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளதா, தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஊக்கம் அளித்துள்ளதா என பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. காஷ்மீரில் காவல்துறையின் கட்டுப்பாடு லெப்டினன்ட் கவர்னரிடம் இருந்தாலும், காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத்தை தூண்டும் எண்ணம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏற்பட்டதாக பாதுகாப்புப் படைகள் கருதுகின்றன. சமீபத்தில் நடந்த காஷ்மீர் தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அவர்கள் மூலம் காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டிவிட திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை சமீபத்தில் எச்சரித்தது. பாகிஸ்தான் பிரதேசத்தில் இருந்து காஷ்மீருக்குள் பறக்கும் ஆளில்லா விமானங்களும் அதிகரித்துள்ளதோடு, இந்த ஆண்டு இதுவரை 40 ஆளில்லா விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.