பாகிஸ்தான் அரசு நாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் குருத்வாராக்களை புதுப்பிக்கவும், அழகுபடுத்தவும் ஒரு ‘மாஸ்டர் பிளான்’ தயாரித்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் 1 பில்லியன் ரூபாய் செலவிட முடிவு செய்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் எவாக்கியூ டிரஸ்ட் சொத்து வாரியத்தின் (ETPB) கூட்டத்தில் எடுக்கப்பட்டது, இதற்கு வாரியத் தலைவர் சையத் அட்டாவுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
இந்த திட்டத்தின் கீழ், கோயில்கள் மற்றும் குருத்வாராக்கள் அழகுபடுத்தப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சையத் அட்டாவுர் ரஹ்மான் கூறினார். சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த அதிக நிதி செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு ETPB 1 பில்லியன் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியதாக ரஹ்மான் குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் நாடு முழுவதிலிருந்தும் இந்து மற்றும் சீக்கிய சமூக பிரதிநிதிகள், அரசு மற்றும் அரசு சாரா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், துறையின் வருவாயை அதிகரிக்க மேம்பாட்டு திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தற்போது அறக்கட்டளை சொத்துக்கள் மேம்பாட்டு பணிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. ஃபரீத் இக்பால் கூறுகையில், நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த நிலத்தை மேம்பாட்டு பணிகளுக்கு வழங்குவதன் மூலம் துறையின் வருவாய் பல மடங்கு அதிகரிக்க முடியும்.
இந்த திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் குருத்வாராக்களை புதுப்பித்து மேம்படுத்துவதற்கான திட்ட இயக்குனர் நியமிக்கப்படுவார் என முடிவு செய்யப்பட்டது. இத்துடன், கர்தார்பூர் வழித்தடத்தின் திட்ட மேலாண்மை பிரிவின் செயல்பாட்டு பணிகளுக்காக ஒரு இயக்குனரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.