டாக்கா: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், 13 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்திற்கு வந்தது இரு நாடுகளுக்கிடையே உறவைப் புதுப்பிக்கும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. அவரை சந்தித்த வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தவுஹித் ஹுசைன், 1971 இல் நடந்த விடுதலைப் போருக்காக பாகிஸ்தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே கடந்த சில ஆண்டுகளாக உறவுகள் நழுவிக் கொண்டிருந்தன. முக்கியமாக, ஷேக் ஹசீனாவின் இந்தியா நெருக்கம், பாகிஸ்தானின் புறக்கணிப்பிற்கு வழிவகுத்தது. ஆனால், கடந்த ஆண்டு நடந்த மாணவர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஹசீனா பதவியை இழந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த பிறகு, வங்கதேசத்தின் அரசியல் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது.
தற்போது இடைக்கால அரசு தலைமையில் செயல்படும் வங்கதேசத்தில், இந்தியா எதிர்ப்பும், உள்ளூர்க் கலவரங்களும், சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழ்நிலையிலும் பாகிஸ்தான் தனது இடத்தை மீண்டும் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது.
இஷாக் தார் தலைமையிலான பாகிஸ்தான் குழுவும், தவுஹித் ஹுசைன் தலைமையிலான வங்கதேச தரப்பும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் 1971 போருக்கான வருத்தத்தை வெளியுறவுத்துறை ஆலோசகர் முன்வைத்ததுடன், பாகிஸ்தானுடன் இருந்த பொது சொத்துகள் மற்றும் வளங்களை பகிர்வது குறித்து தீர்வுகளைத் தேடவேண்டும் என்றார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் தற்போது 100 கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ள நிலையில், வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் வழிகளும் கலந்துரையாடப்பட்டன. முதலீடு, வர்த்தக ஒத்துழைப்பு, மற்றும் பல்வேறு ஒப்பந்தங்களும் இச்சந்திப்பில் கையெழுத்தாகின.
இந்த நடத்தை இரு நாடுகளுக்கும் ஒரு புதிய தொடக்கமாக அமையுமா அல்லது பழைய பிழைகளைத் தீர்க்கும் வழியாக உருவாகுமா என்பது காலமே நிர்ணயிக்க வேண்டும்.