இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து பாகிஸ்தான், எந்த நேரத்திலும் தாக்குதல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளது. இதனால் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தலாம் என்ற நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் தீர்க்கமான பதில் அளிக்கப்படும். பிராந்தியத்தில் ஏதேனும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு இந்தியா தான் பொறுப்பேற்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
உளவுத்துறை தகவலின்படி, பஹல்காம் தாக்குதலை மையமாக வைத்து இந்தியா ராணுவ நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும், இது எந்த நேரத்திலும் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.