இஸ்லாமாபாத்: மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையில், ஈரானுக்கு அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தியை பயன்படுத்த முழு உரிமை உண்டு என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். அண்மையில் ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியான், பாகிஸ்தானுக்கு அரசு முறை பயணமாக வந்த போது இஸ்லாமாபாத்தில் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது, வர்த்தகம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுதோறும் ரூ.69,500 கோடியாக உயர்த்த ஒப்புதல் பெற்றனர்.
பின்னர், இணைந்து செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர், காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்தார். மேற்காசிய பிராந்தியத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்று திரண்டு பேசியருத்தல் தேவை எனவும் வலியுறுத்தினார்.
அணுசக்தி தொடர்பாக, ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அதை பயன்படுத்தும் உரிமை உடையது எனவும், அந்த உரிமையை வலியுறுத்தும் வகையில் பாகிஸ்தான் உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்தார்.
ஈரான் அதிபர் பேசிய போது, தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமருடன் கலந்துரையாடியதாகவும், விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டம் இருநாடுகளுக்கிடையேயான தொடர்புகளை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பகிர்ந்துள்ள ஆர்வமும் ஒத்துழைப்பும் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.