நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான பர்வதனேனி ஹரீஷ், பாகிஸ்தானை மதவெறியும் பயங்கரவாதமும் நிரம்பிய நாடாக கடுமையாக சாடினார். இந்த கூட்டம், “அமைதியான தீர்வுகள் மூலம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் நடந்தது.

பாகிஸ்தான் இந்தாண்டு ஜனவரியில் தற்காலிக உறுப்பினராக கவுன்சிலில் இணைந்துள்ளது. அந்த நாட்டின் தலைமையில் கூட்டம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் கலந்து கொண்ட ஹரீஷ், பயங்கரவாதத்திற்கும் மதவெறிக்கும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை தான் உண்மையான சமாதான வளர்ச்சிக்கான அடிப்படை எனத் தம் கருத்தைத் தெரிவித்தார்.
இந்தியா, வளர்ச்சிகரமான ஜனநாயகமும், சகிப்புத்தன்மையுடன் கூடிய பொருளாதார முன்னேற்றமும் கொண்ட நாடாக இருக்க, பாகிஸ்தான் மதவெறி, தீவிரவாதம் மற்றும் சர்வதேச நிதி உதவிகளில் மட்டுமே சார்ந்த நாடாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதையே தன் நிலையாக கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஹரீஷின் உரை பாகிஸ்தான் மீது வெளிப்படையான குற்றச்சாட்டாகவும், இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் முக்கியமான அறிவிப்பாகவும் பார்க்கப்படுகிறது. அவரது கூற்றுகள், சர்வதேச மக்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன.