டோக்கியோ: பரபரப்பான விமான போக்குவரத்தை கையாளும் ஜப்பான் ஏர்லைன்ஸ் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதால், அதன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை 7.30 மணிக்கு விமான சேவையை நிறுத்துவதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
ஜப்பான் ஏர்லைன்ஸ் தனது X பக்கத்தில், நிலைமை சீரடைந்தவுடன் பயணிகளுடன் நிலைமை குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாகவும், சிரமத்திற்கு மன்னிப்புக் கோருவதாகவும் பதிவிட்டுள்ளது. இதனால், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானங்கள் புறப்படுவதிலும், வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டிக்கெட் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஜப்பான் ஏர்லைன்ஸ், சிக்கலைக் கண்டறிந்து ஒரு ரூட்டரை மூடியது.
மற்றொரு பெரிய ஜப்பானிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸ், அதன் அமைப்புகளில் சைபர் தாக்குதல் நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. மிகவும் பரபரப்பான விமானப் போக்குவரத்தைக் கையாளும் ஜப்பான் ஏர்லைன்ஸ் மீதான சைபர் தாக்குதல் உலக அளவில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.