காஸா: நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இஸ்ரேல் ராணுவம் தடை விதித்துள்ளதால், காஸா முழுவதும் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. பல்வேறு நாடுகளால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை காஸாவுக்குள் நுழைய இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் காசா முழுவதும் பாலஸ்தீன மக்களின் முக்கிய உணவு ஆதாரமான சப்பாத்தி மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சர்வதேச அமைப்புகள் உணவு விநியோகம் செய்வதை நிறுத்தியுள்ளன. வீடுகளில் மாவு கையிருப்பு தீர்ந்து விட்டதால், நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சப்பாத்தி விற்பனை செய்யும் கடைகளை முற்றுகையிட்டனர்.
இதனால் பெண்கள், குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பது தொடர்கிறது. மணிக்கணக்கில் காத்திருந்தால் ஒரு சிலருக்கு மட்டுமே சப்பாத்திகள் கிடைக்கும். ஆனால், பெரும் பட்டினியுடன் வரிசையில் காத்திருந்து வெறுங்கையுடன் வீடு திரும்பிய பலரின் அவல நிலையும் காஸாவில் அரங்கேறி வருகிறது. மாவுத் தட்டுப்பாட்டால் காஸாவில் உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.