காசா: ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டு கிடப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே கடந்த மாதம் 21-ந்தேதி இஸ்ரேல் தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது.
இதைதொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக கூறப்பட்டது. ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தாருடன் ரகசியமாக பேசியதாகவும் இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் உளவுத்துறையும், ராணுவமும் தொடர்ச்சியாக காசாவில் சின்வாரை தேடியது. இந்த நிலையில், சின்வார் கொல்லப்பட்டு கிடப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், ராணுவ நடவடிக்கையில் காசாவில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் கொல்லப்பட்டவர்களில் யாஹ்யா சின்வாரும் ஒருவராக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்வார் கொல்லப்பட்டதை பெயர் சொல்ல விரும்பாத இஸ்ரேல் ராணுவ அதிகாரி இந்த தகவலை உறுதி செய்திருப்பதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.