பாகிஸ்தான் தற்போது மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதிலிருந்து மீள பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டில் உள்ள கனிமங்களின் உரிமைகளை வெளிநாடுகளுக்கு வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு முன்னெடுத்து வருகிறது.

ரேர் எர்த் மெட்டல் மற்றும் பிற கனிம வளங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறந்துவிடும் முயற்சியில், அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இதன் மதிப்பு 3 டிரில்லியன் முதல் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
தற்போது இவ்வளங்கள் மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன, ஆனால் முதலீட்டை எளிதாக்க அவற்றை நடுவண் அரசின் கீழ் கொண்டு வர சட்ட திருத்தம் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள வளங்களை சீனாவுக்கு, வட பலுசிஸ்தான் மற்றும் தென் கைபர் பக்துன்க்வா வளங்களை அமெரிக்காவுக்கு வழங்க வாய்ப்பு உள்ளது.
மேலும், உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத செம்பு-தங்கப் படிவம் உள்ள ரெக்கோ டிக் சுரங்கத்தை சவுதி அரேபியாவுக்கு வழங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிக முதலீடு செய்யத் தயாரான நாடுகளுக்கே உரிமைகள் ஒதுக்கப்படும் என்றும், அனுமதிகள் விரைவாக வழங்கப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.