
பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினத்தையொட்டி பாலஸ்தீன அரசுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பாலஸ்தீன மக்களின் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. பாலஸ்தீனத்தில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். அனைத்து வகையான பயங்கரவாதமும் முடிவுக்கு வர வேண்டும். காஸாவில் நடந்து வரும் மோதல்கள் பலஸ்தீன மக்களுக்கு பெரும் உயிர்ச் சேதத்தையும் இன்னல்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள தற்போதைய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பாலஸ்தீனத்தில் நிரந்தரமான மற்றும் அமைதியான தீர்வை எட்டுவதற்கு தூதரகப் பேச்சுவார்த்தைகள் மட்டுமே ஒரே வழி என்று இந்தியா உறுதியாக நம்புகிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை தீர்வு, இறையாண்மை மற்றும் சுதந்திரமான பாலஸ்தீனம், இஸ்ரேலுடன் இணைந்து அமைதியுடன் வாழ இந்தியா ஆதரவு அளிக்கிறது.

பாலஸ்தீனத்தின் வளர்ச்சிக்கு இந்தியா துணை நிற்கும். பாலஸ்தீன மக்களின் தேவைகளின் அடிப்படையில் மக்களை மையப்படுத்திய திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவும் மக்களுக்கு ஆதரவளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிக்கையை டெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.